Thursday 4 August 2016

அதிகாலை..!

அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதி காலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும், தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள், மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக! (அபூதாவூத்)

முஹமத் நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.

ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார். அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்.

அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான். (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும், சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப் படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.

படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான். வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்.

படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள்மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான். உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன். அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன். (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை :
உபை இப்னு கஅப்(ரழி) அறிவிக்கின்றார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள். இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா? மக்கள், இல்லை என்று கூறினர். மீண்டும், இன்னவர் வந்தாரா? என்று கேட்க, மக்களும் இல்லை என்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்.

நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

இறையச்சம் என்றால் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம்
ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி
இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம்
(அபூ ஹதிரிய்யா பிரதான சாலை)
நாள்: 17-07-2016
தலைப்பு: இறையச்சம் என்றால் என்ன?
வழங்குபவர்: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா