Friday 21 April 2017

ஹிஜாப் – தெளிவை நோக்கி


கடந்த காலங்களில் BBS அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான அணுகுமுறைகளுமாகும். பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் பின்வரும் நிலைப்பாடுகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.
01. மூடுவது கூடாது:
பெண்கள் முகத்தை மூடக் கூடாது. அது ஹராம்.முகத்தை மூடும் பெண்கள் மறைமுகமாக நபி(ச) அவர்களின் மனைவிமாரின் அந்தஸ்தைத் தேடுகின்றனர் என்ற வாதம், இந்தக் கருத்தை சமூகத்தில் இருக்கக் கூடிய வழிகெட்ட பிரிவினர்களில் ஒரு சிலர் கூறிக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய அறிஞர் களில் யாரும் இந்தக் கருத்தை முன்வைத்ததில்லை என்பது கவனத்திற்குரியதாகும். இந்தக் கருத்தும் இந்தக் கருத்தை முன்வைத்தவர்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களாவர்.
02. பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயக் கடமை:
இந்த நிலைப்பாட்டில் கடந்த கால அறிஞர்களில் பலரும் இருந்துள்ளனர். பொதுப்படையான ஆதாரங்களையும் கியாஸின் அடிப்படையிலான சில விளக்கங்களையும் இந்தகையவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
03. பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் அல்ல. திறப்பதற்கு அனுமதி உண்டு:
இந்தக் கருத்திலும் உலமாக்கள் பலர் இருக்கின்றனர்.
பெண்கள் விரும்பினால் முகத்தை மூடலாம். விரும்பினால் முகத்தைத் திறக்கலாம். இரண்டுக்கும் இடம்பாடு உள்ளது என்பது எமது நிலைப்பாடாகும்.
மூடுதல்:
நபி(ச) அவர்களது காலத்தில் முகத்தை மூடும் பழக்கம் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்துள்ளது. இஹ்ராத்துடன் இருக்கும் பெண் முகத்திரை அணியக் கூடாது என்பது சட்டமாகும். இஹ்ராமுடன் இருக்கும் பெண் முகத்திரை அணியக் கூடாது என்றால் இஹ்ராம் இல்லாத நிலையில் உள்ள பெண்கள் முகத்திரை அணிய அனுமதி இருப்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் பெண்கள் முகத்திரை அணியும் பழக்கம் உள்ளவர்களாக இருந்திருப்ப தையும் இதன் மூலம் உணரலாம்.
‘நாம் ஆண்களிலிருந்து எங்களது முகங்களை மறைப்பவர்களாக இருந்தோம்’ என அஸ்மா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இப்னு குஸைமா: 2690
ஹாகிம்: 1668
பொதுவாக முகத்தை மூடும் பழக்கம் ஸஹாபிப் பெண்களிடம் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். இருப்பினும் முகத்தை மூடுவது கட்டாயம் முகத்தைத் திறப்பது ஹராம் என்று கூற முடியாது. ஏனெனில், நபி(ச) அவர்களுக்கு முன்னிலையிலேயே நபித்தோழியர்கள் முகத்திரை இல்லாது இருந்துள்ளார்கள். அனைத்து ஹதீஸ்களையும் இணைத்தே இப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேட வேண்டும். சமூகத்தில் இது ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளதால் இது தொடர்பான சில ஹதீஸ்களை தொகுத்து நோக்குவோம்.
01)
‘ஒரு பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு வந்த நபி(ச) அவர்கள், ‘பெண்கள்தான் நரகத்தில் அதிகமாக இருக்கக் கண்டதாகக் கூறினார்கள். அப்போது பெண்கள் மத்தியில் இருந்து கறுப்புக் கன்னத்தையுடைய ஒரு பெண் என்ன காரணத்திற்காக பெண்கள் அதிகமாக நரகம் செல்வார்கள் எனக் கேள்வி கேட்டாள்…’ (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(வ)
ஆதாரம்: முஸ்லிம்- 885, தாரமீ- 1651
இந்த நபிமொழியில் கேள்வி கேட்ட பெண்ணின் கன்னம் பற்றி விபரிக்கப்படுகின்றது. அந்தப் பெண் முகத்திரை அணிந்திருந்தால் கன்னம் பற்றி விபரித்திருக்க முடியாது. முகத்தை மூடுவது வாஜிப், அதைத் திறப்பது ஹராம் என்றிருந்தால் நபி(ச) அவர்கள் அந்த இடத்தில் அவசியம் அது பற்றி குறிப்பிட்டிருப்பார்கள்.
02
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார்: ‘ஃபழ்ல் (வ) நபி (ச) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ச) அவர்கள்), ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ச) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கி யுள்ளான். ஆனால், என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே, நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ச) அவர்கள், ‘ஆம்!’ என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது. ‘
புஹாரி: 1513, 1855, 6228
முஸ்லிம்: 1334
இந்த அறிவிப்பில் அந்தப் பெண்ணை ஃபழ்லும் பார்த்துள்ளார், அந்தப் பெண்ணும் இவரைப் பார்த்துள்ளார். பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்றிருந்தால் நபி(ச) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு முகத்தை மூடுமாறு கட்டளையிட்டிருப்பார்கள்.
03)
ஸஹ்ல் இப்னு ஸஅத்(வ) அறிவித்தார்: ‘ஒரு பெண்மணி இறைத்தூதர்(ச) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள-) வந்துள்ளேன்’ என்று கூறினார். இறைத்தூதர்(ச) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ச) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லை என்றால், அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்!’ என்று கூறினார்.
நபி(ச) அவர்கள், ‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே! ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ச) அவர்கள், ‘உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!’ என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘அல்லாஹ் வின் மீதாணையாக! ஏதுவும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். ‘இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!’ என்று நபி(ச) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது’ என்று கூறினார்.
அறிவிப்பாளர் ஸஹ்ல்(வ) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார்.
அதற்கு இறைத்தூதர்(ச) அவர்கள், ‘இந்த வேட்டியை நீர் அணிந்தால், அவளின் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?)’ என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ச) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, ‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது’ என்று கேட்டார்கள். அவர், ‘இன்ன, இன்ன , சூறாக்கள் என்னுடன் உள்ளன’ என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ச) அவர்கள், ‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (ஓதுவேன்)’ என்று கூறினார். நபி(ச) அவர்கள், ‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!’ என்று கூறினார்கள்.’
புஹாரி: 5030, 5126
இந்த ஹதீஸில் அந்தப் பெண்ணை நபி(ச) அவர்கள் ஏற இறங்கப் பார்த்துள்ளார்கள். முகத்தையும் மூடி இருந்தால் பார்ப்பதற்கு எதுவும் இருக்காது!
04
ஆயிஷா(Ë) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் ஸுபஹ் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை அறிய மாட்டார்கள். ‘ (புஹாரி: 872)
இருட்டின் காரணமாக அவர்கள் யார் என்பது அடையாளம் தெரியாது என்று கூறப்படுகின்றது. அப்படியென்றால் வெளிச்சமாக இருந்தால் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரியும் என்பதையே இது உணர்த்துகின்றது. முகத்தை மூடியிருந்தால் இருட்டாக இருந்தாலும் வெளிச்சமாக இருந்தாலும் ஆள் அடையாளம் தெரியாது. எனவே, பள்ளிக்கு வந்த பெண்கள் முகத்திரை இல்லாமல் வந்து சென்றுள்ளனர் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. இதன் மூலமும் முகத்தைத் திறப்பதற்கு அனுமதி இருப்பதை அறியலாம்.
05)
அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்: ‘இப்னு அப்பாஸ்(வ) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு முறை) நபி(ச) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப் படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ச) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ச) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
…அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்: ‘நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.’ (புஹாரி: 5652, முஸ்லிம்: 2576)
இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் குறித்த பெண்ணை அடையாளம் கண்டுள்ளார்கள். கறுப்பு நிறப் பெண் என்று அடையாளம் சொல்கின்றார் கள். நபி(ச) அவர்களிடம் அந்தப் பெண் வந்த போதும் இப்னு அப்பாஸ் அந்தப் பெண்ணை அதாஃ இப்னு அபீபாஹ் அவர்களுக்குக் காட்டிய போதும் அந்தப் பெண் முகத்தையும் மூடி இருந்திருந்தால் சாத்தியமாக இருக்காது. எனவே, பெண்கள் முகத்தை மூடலாம். ஆனால், மூடுவது வாஜிப் அன்று. பெண்கள் முகத்தைத் திறக்க அனுமதி உண்டு. திறப்பது ஹராம் அல்ல. மூடுவதா? திறப்பதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒருவர் மூடுவதை நான் சிறந்ததெனக் கருதுகின்றேன் என்று கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது.
ஆனால், முகத்தை மூடக் கூடாது என்ற கருத்தும் முகத்தைத் திறப்பது கூடாது ஹராம் என்ற கருத்தும் தவறானவையாகும். மூடவும் திறக்கவும் அனுமதி உண்டு. ஒரு பெண் விரும்பினால் மூடிக் கொள்ளலாம். விரும்பினால் திறக்கலாம். அல்லது சந்தர்ப்ப சூழலைக் கவனத்திற் கொண்டு மூடுவது சிறந்தது எனக் கருதும் இடத்தில் மூடிக் கொள்ளலாம். திறப்பதில் பிரச்சினையில்லை. அல்லது, திறப்பதுதான் பேணுதலானது எனக் கருதும் இடத்தில் திறந்து கொள்ளலாம். இதை எமது சகோதரர்கள் பிரச்சினையாகவும், தனி நபர்களைத் தாக்குவதற்கான அம்சமாகவும் எடுத்துக் கொள்வதும், உலமாக்கள் கூட ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பதும் அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

No comments:

Post a Comment